கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி: தமிழக அரசு உத்தரவு

கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி அதன் ஆழத்தை குறிப்பிட்டும், அத்துமீறி நுழைவதற்கு எதிரான எச்சரிக்கையுடனும் கூடிய முக்கிய எச்சரிக்கை பலகைகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்க வேண்டும்.
கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி: தமிழக அரசு உத்தரவு.
Published on: 

சென்னை,

தமிழகத்தில் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபுசங்கர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகள்

சமீப காலங்களில் பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகள் பதிவாகி வருகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது. இத்தகைய பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகள் குறிப்பாக, பருவமழையின்போது மழைநீர் தேங்கும் ஆழமான குழிகள், உள்ளூர்வாசிகள், குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் மேய்ச்சல் கால்நடைகள் தவறி விழுவதற்கும், நீரில் மூழ்குவதற்கும் வழியை ஏற்படுத்துகின்றன.

குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி

இதை தவிர்ப்பதற்காக, அரசு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்கள் இரண்டிலும் அமைந்துள்ள காலாவதியான அனைத்து கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றியும் நீடித்திருக்கக்கூடிய சுற்றுவேலி அமைக்கப்பட வேண்டும். நீடித்த உழைப்பு மற்றும் பயனுள்ள தடுப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து குவாரிகளைச் சுற்றியும் குறைந்தபட்சம் 5 அடி உயரத்திற்கு வேலி அமைக்கப்பட வேண்டும்.

2 மாத காலத்திற்குள் வேலி அமைக்க வேண்டும்

அரசு நிலங்களில் அமைந்துள்ள கைவிடப்பட்ட குவாரிகளுக்கு 2 மாத காலத்திற்குள் வேலி அமைக்கும் பணிகளை அதிக முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட முன்னாள் குத்தகைதாரர்கள் தங்கள் சொந்த செலவில் முறையான வேலியை அமைத்துள்ளார்களா? என்பதை உறுதிசெய்ய, காலாவதியான அனைத்து பட்டா நில குவாரிகளிலும், விரிவான கள சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் குத்தகைதாரர்கள் அதை பின்பற்றத் தவறியிருந்தால் உடனடியாக அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்

தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் கீழ் கடுமையான அமலாக்க நடவடிக்கை தொடங்க வேண்டும். கைவிடப்பட்ட குவாரி என்பதைத் தெளிவாகக் குறிக்கும் வகையில் அதன் ஆழத்தை குறிப்பிட்டும், அத்துமீறி நுழைவதற்கு எதிரான எச்சரிக்கையுடனும் கூடிய முக்கிய எச்சரிக்கை பலகைகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதன் சுற்றளவில் வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X