

சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த படைக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரிதான் சிபாரிசு செய்துள்ளார். அவருடைய சிபாரிசை ஏற்று, முதல்-அமைச்சர் விஜய் இந்த பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல், பவானீஸ்வரியை இந்த படைக்கு ஐ.ஜி.யாகவும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கியுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" பிரிவினருக்கான பிரத்யேகப் புதிய சீருடை விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நவீன சீருடையின் வண்ண விவரங்கள் பின்வருமாறு:
* சட்டை : நேவி ப்ளூ (அடர் நீலம்) நிற அரைக்கைச் சட்டை
* பேண்ட்: பாரம்பரிய காக்கி நிற முழுப் பேண்ட்
* தொப்பி: கருப்பு நிறத் தொப்பி
* இதர அம்சங்கள்: கருப்பு நிற வெப் பெல்ட் பிரத்யேக "சிங்கப்பெண்" லோகோ, மற்றும் கருப்பு நிற காலணிகள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, பெண் காவலர்களை மட்டுமே கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு படைக்கு இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.