கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். இதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
அப்போது அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்றும் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2,௦௦௦ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். ரூ. 20,௦௦௦ என்ற அளவில் மடிக்கணினி தரமாக வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை, புளுடூத், 720பி எச்.டி. கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் மடிக்கணினி கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.






