மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

பயனாளிகளுக்குச் சரியான தகவல்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
Published on: 

சென்னை,

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் வலியுறுத்தி உள்ளார்.

உதவித்தொகை நிறுத்தம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின்’ கீழ், இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இந்த மாதம் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, முதற்கட்டத்தில் இணைக்கப்பட்டு இதுவரை முறையாக உரிமைத்தொகை பெற்று வந்த பல பயனாளிகளுக்கும் இந்த மாதம் ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார்களும் தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ளன.

பயனாளிகள் வேதனை

இதனால் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்த பெண்கள், இது குறித்து விசாரிப்பதற்காக ‘முதல்வரின் முகவரி’ உதவி மையத் தொலைபேசியைத் தொடர்பு கொண்டால், அங்குள்ள பணியாளர்களால் முறையான பதில் அளிக்கப்படுவதில்லை. சிலரிடம் "இந்த மாத இறுதிக்குள் தொகை வந்துவிடும்" எனப் பொத்தாம் பொதுவாகப் பதில் கூறப்படுவதாகவும், புகார் பதிவு எண் மற்றும் முழுமையான விவரங்களைக் கோரினால், "மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பான பதில்கள் தங்களிடம் இல்லை" எனப் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கப்படுவதாகவும் பயனாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஏற்புடையதல்ல

குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்திற்குப் பேருதவியாக இருக்கும் இந்த ரூ.1,000 உரிமைத்தொகையை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பெண்கள் உள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, எதற்காகத் தொகை நிறுத்தப்பட்டது என்ற காரணமும் தெரியாமல் பெண்கள் அலைக்கழிக்கப்படுவது ஏற்புடையதல்ல.

அரசு விளக்க வேண்டும்

எனவே, மகளிர் உரிமைத்தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்களை ஏமாற்றமடையச் செய்வதைத் தவிர்க்க, தகுதியான அனைத்துப் பயனாளிகளுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகையை எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், யாருக்கேனும் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டிருப்பின், அதற்கான உரிய காரணத்தைத் வெளிப்படைத்தன்மையுடன் உடனடியாக அரசு விளக்க வேண்டும் என்றும், உதவி மையங்கள் மூலம் பயனாளிகளுக்குச் சரியான தகவல்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X