கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது - வைகோ

தமிழ்நாட்டின் எந்த கடற்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
வைகோ
கோப்புப்படம்
Published on

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கெனவே அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.425 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1,076 கி.மீ. நீள கடற்கரை உள்ளது . 14 மாவட்டங்கள் கடல் தொழிலை சார்ந்து உள்ளன. அந்நிய செலவாணியை ஈட்டுவதில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த திட்டம் செயலாக்கம் பெறும்போது, தமிழ்நாட்டு கடல் பகுதிகள் சர்வ நாசத்தை சந்திக்க நேரும். இதனால், கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது மாத்திரமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச்சூழலில் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும்.

ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு மிகப் பெரிய துளைகள் போட்டுத்தான் எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும்போது ஆபத்தான நச்சுத் தன்மையுள்ள ரசாயனப் பொருட்களை உள்ளே செலுத்தித் தான் அந்தப் பணிகள் நடக்கும். அத்துடன் பேரிரைச்சலோடு செயல்படுத்தப்படும் இந்த செயல்பாடுகளால் நில அதிர்வு ஏற்படும். இது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களின் உயிர்களை காவு கேட்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஆரம்ப நிலையிலேயே ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.

எனவேதான் கடலில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் என சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது.

அதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்த கடற்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com