

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சமீபத்தில் கிறிஸ்தவ மத போதகர்கள் கிறிஸ்தவர்கள் ஒற்றுமைக்காக நடத்திய கூட்டத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் வன்னியரசு, காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்கள் ஒற்றுமைப்பட்டால் சாதனை நிகழ்த்த முடியும் என்ற கோணத்தில் அவர்கள் உரையாற்றிய அந்த உரைகள் சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்துக்கள் மத்தியில் நாமும் ஒற்றுமைப்பட்டு ஆக வேண்டுமோ என்ற உணர்வை தூண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதச்சார்பின்றி ஒற்றுமையாக வாழும் பொழுது இப்படிப்பட்ட நிகழ்வுகள் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்து மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தி அனைவரையும் சமமாக எண்ண வேண்டிய அரசினுடைய சபாநாயகரும், அமைச்சருமே இப்படி மதம் சார்ந்து தூண்டுவது ஏற்புடையதல்ல. மதரீதியான வேறுபாடுகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட தமிழர்கள் என்ற ஒரு புள்ளியில் மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். அதனால்தான் வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்துக்கள் அணிசேராமல் அனைவரையும் அரவணைத்து வாழ்கிறார்கள்.
எந்த காரணத்தைக் கொண்டும் அரசு சார்ந்த பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மதச்சார்பின்மைக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மதம் சார்ந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்திய பின்பும் இந்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்றால் தெரிந்து நடக்கிறதா! தெரியாமல் நடக்கிறதா! கலந்து கொண்டது மட்டுமில்லாமல் ஒரு மதத்திற்கு ஆதரவாக அரசு பிரதிநிதிகள் உரையாற்றி இருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இனிவரும் காலத்தில் மிக கவனமாக அமைச்சர்கள் தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இந்துக்கள் ஒற்றுமைப்படுவதை தவிர்க்க முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.