தமிழக அரசும் பெட்ரோல் மீதான ‘வாட்' வரியை குறைக்க வேண்டும்: மத்திய மந்திரி எல்.முருகன்

பிற மாநிலங்களை போன்று தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்' வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
தமிழக அரசும் பெட்ரோல் மீதான ‘வாட்' வரியை குறைக்க வேண்டும்: மத்திய மந்திரி எல்.முருகன்
Published on

வீடு வீடாக தடுப்பூசி

சென்னை கோயம்பேடு பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று தொடங்கிவைத்து ஆய்வு செய்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது எல்.முருகன் பொதுமக்களிடம், தடுப்பூசி போட்டது பற்றி விசாரித்து, அதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

வரலாற்று சாதனை

பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பேசி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வீடு வீடாக கொண்டுசேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக நாம் இங்கு வந்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசியை 100 கோடிக்கும் மேலாக செலுத்தி வரலாற்று சாதனையை பிரதமர் மோடி செய்திருக்கிறார்.

அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்

தமிழகத்துக்கு மத்திய அரசு 6.32 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்கி உள்ளது. இதில், 5.94 கோடி டோஸ்கள் அதாவது, 94 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் 71 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 32 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர். இன்னும் 65 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. எனவே இவற்றை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் 2-வது தவணை தடுப்பூசியை காலதாமதம் இன்றி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாம் இந்த கொரோனாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறோம். எனவே, பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

பெட்ரோல் விலை மேலும் குறையும்

சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துவரும் நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் குறைத்து உள்ளார். சில மாநிலங்கள் தாமாக முன்வந்து பெட்ரோல், டீசல் மீதான வாட்' (மதிப்புக்கூட்டு வரி) வரியை குறைத்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் 'வாட்' வரி ரூ.19 குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வாட்' வரி ரூ.17 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழக அரசும் வாட்' வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com