விரைந்து டெங்குவை ஒழிக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்களோடு சேர்த்து 12 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை.
Published on

சென்னை,

சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து டெங்குவை ஒழிக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெங்குவால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்களோடு சேர்த்து 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

கொசு ஒழிப்பு பணிகள்

டெங்கு பரவலை தடுக்க தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வும் குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். வருமுன் காப்பதே நோய் வராமல் காப்பதின் சாராம்சம் என்பதனை உணர வேண்டும். தமிழக அரசு டெங்கு பாதிப்பை தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

விரைந்து டெங்குவை ஒழிக்க நடவடிக்கை

சாதாரண காய்ச்சலும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சளி, இருமல், உடல் சோர்வு ஆகியவையும் பொதுமக்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. சென்னையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பிற பகுதியில் அதிக அளவில் பரவுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம். அனைத்து மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து டெங்குவை ஒழிக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com