தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை பட்டியல்; அனைத்து துறைகளும் தயாரிக்க உத்தரவு

பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடுகளை தடுக்க வருகையில்லா ஆவணப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை பட்டியல்; அனைத்து துறைகளும் தயாரிக்க உத்தரவு
Published on

சென்னை,

த.வெ.க. அரசு பதவி ஏற்று 100 நாட்கள் ஆக இருக்கும் நிலையில், அனைத்து துறைகளும் இதுவரை செய்த சாதனையடங்கிய பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்தது. மே 10-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கவர்னர் ஆர்.வி.அர்லேகர், விஜய்க்கு முதல்-அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திராவிட கட்சிகளின் 60 ஆண்டுகால தொடர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த வெற்றி, தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சத்தை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. லஞ்சம் கேட்டால் தன்னிடம் புகார் அளிக்க வலியுறுத்திய அவர், இதற்காக 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் அறிவித்தார்.

கனிமக்கொள்ளை தடுப்பு

பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்புப்படை', 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல், அம்மா உணவகங்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு ரூ.134 கோடியில் சிறப்புத் தொகுப்பு திட்டம் என பல அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடிக்கு ரூ.2 ஆயிரத்து 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில்துறை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘ஜல்ஜீவன் 2.0' குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடுகளை தடுக்க வருகையில்லா ஆவணப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கனிமக் கொள்ளை தடுப்பு மற்றும் சட்டவிரோத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. அரசின் 100 நாட்கள்

இவையெல்லாம் மாற்றத்திற்கான தொடக்கம் மட்டுமே என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பிரகடனம் செய்திருந்தார். த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சாதனைப் பட்டியலைத் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த துறை அதிகாரிகள் இந்தப் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். விரைவில் இந்த சாதனைகள் குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஞ்சமில்லாத மற்றும் பெண்களுக்கு முழுப்பாதுகாப்பான முன்மாதிரி தமிழ் நாட்டை உருவாக்குவதே த.வெ.க. அரசின் நோக்கமாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com