தமிழக கவர்னரின் குரலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் குரலும் ஒரே மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன - கே.எஸ்.அழகிரி

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், அண்ணாமலைக்கும் தமிழ் மொழி மீது ஏற்பட்டிருக்கும் பாசம் வெறும் வேஷம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என கூறியுள்ளார்.
தமிழக கவர்னரின் குரலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் குரலும் ஒரே மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன - கே.எஸ்.அழகிரி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பரிந்துரைத்ததில் தாமதம் ஏன்? என்று, தமிழக பாஜக தலைவர் தலைவர் அண்ணாமலையை போல் கேள்வி எழுப்பியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கவர்னரின் குரலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குரலும் ஒரே மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வது தான் பாஜகவின் நரித்தனம். வல்லபாய் பட்டேலை பிரதமராக்கி இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என்கிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா. முதல் தேர்தல் நடப்பதற்கு முன்பே வல்லபாய் பட்டேல் இறந்து விட்டார்.

பிறகு எப்படி வல்லபாய் பட்டேலை பிரதமராக்க முடியும்? இது போன்று வரலாறுகளைத் திரிக்கும் வேலையை அமித்ஷா மட்டுமல்ல, அவரது இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு வரும் கவர்னர் ரவியும், தமிழக பாஜகதலைவர் அண்ணாமலையும் செய்து வருகின்றனர்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் அண்ணாமலைக்கும் தமிழ் மொழி மீது ஏற்பட்டிருக்கும் பாசம் வெறும் வேஷம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அரசிலும் அரசியலிலும் செய்யும் ஜனநாயக படுகொலையையும், கோமாளித் தனத்தையும் இனியும் கைக்கட்டி, வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலையை நடத்துவதற்கு இருவரையும் ஆயுதமாகப் பயன்படுத்த பாஜக முயல்கிறது. பூனைகள் வெளியே வந்து விட்டன. இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்து விட்டது. இத்தகைய சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வகுப்புவாத எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர சூழல் உருவாகியிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com