தமிழகம் கொலைகளின் கூடாரமாக மாறிவிட்டது - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழகம் கொலைகளின் கூடாரமாக மாறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்,

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், விஜய் தலைமையின் கீழ் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்கான அவலச் சான்று.

குற்றச் செயல்கள்

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், 6 -க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் என இதுவரை 500-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தமிழகத்தில் நடந்துள்ளன, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன, 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் கரங்களில் பயங்கர ஆயுதங்கள் படு சாதாரணமாகப் புழங்குகின்றன. சட்டம் ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சரோ, மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா, நவீன வசதிகளுடன் கூடிய புதிய சொகுசு தலைமைச் செயலகம் என ஆடம்பரங்களில் புரண்டு கொண்டிருக்கிறார்.

தேர்தலின் போது “மாற்றம்” என்ற பெயரில் மக்களிடம் மன்றாடி ஓட்டு கேட்ட விஜய், முதல்-அமைச்சர் அரியணையில் அமர்ந்த பிறகு அந்த மக்களை தினந்தினம் இப்படி உயிர் பயத்தில் செத்துப் பிழைக்க வைத்துக் கொண்டிருப்பது அநியாயம். அப்பட்டமான நம்பிக்கை துரோகம். எனவே, சட்டமன்றத்தில் சினிமா வசனங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com