கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல்? - பலப்பரீட்சைக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல்? - பலப்பரீட்சைக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 தொகுதிகள் காலி

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கிடையே, கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம் அடைந்ததை தொடர்ந்து, காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எஸ்.ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் கடந்த மே, ஜூன் மாதங்களில் அக்கட்சியில் இருந்து விலகி தவெக.வில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா உள்பட 6 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் போட்டி

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரையும் மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மாறியபோதே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்கான தேர்தல் அட்டவணை ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலமுனை போட்டி

இதனிடையே ஆளுங்கட்சியான த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. நாம் த.மிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால் இந்த இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த 6 தொகுதிகளையும் கைப்பற்ற த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது.

அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டி?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தி.மு.க.வும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இ.பரந்தாமன் கூறுகையில், "தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகே வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

சமீபத்திய இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையையும், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தவெக அரசை மக்கள் நிராகரித்து உள்ளதையும் பிரதிபலிக்கிறது" என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டம்

கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், "தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற 3 வாரங்களுக்குள் ஒரு கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. அத்தகைய வேட்பாளர்களுக்காக எப்படி வாக்கு கேட்க முடியும்? இடைத்தேர்தல் தொடர்பாக டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், "தேர்தல் அட்டவணை வெளியான பிறகு இடைத்தேர்தல் குறித்து கட்சி முடிவு செய்யும். அரசியல் காரணங்களுக்காகவே சமீபத்திய இடைத்தேர்தல்களில் போட்டியிட்டோம். தவெகவை ஆதரிக்க முடியாது என்பதால் தேர்தலில் வேடிக்கை பார்க்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.

கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டி?

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 6 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

இதனால், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X