

சென்னை,
எதிர்க்கட்சியினர் மீதான புகார்களில் அசுர வேகத்தில் செயல்படும் காவல்துறை, ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் ஆமை வேகத்தில் கூட செயல்படாதது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைப் பொதுக்கூட்டங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில்கூட விமர்சித்தால் உடனுக்குடன் வழக்குப்பதிவு, அடுத்தடுத்து விசாரணைகள், நள்ளிரவு நேரங்களில்கூட கைது எனப் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசும், அதன் காவல்துறையும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் என்றால் மட்டும் கள்ள மௌனம் காத்து, ஆமை வேகத்தில் கூட செயல்பட மறுப்பது ஏன் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
- அமமுக சட்டமன்ற உறுப்பினரை ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தின் மூலம் திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்கியது.
- விளையாட்டு மைதானத்தில் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்.
- பெண்ணைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடையயதாக சொல்லப்படும் ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர்.
- அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காகச் சொந்தக் கட்சியினரிடையே பேரம் பேசியதாக நீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள்.
- பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காகத் தானே லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட அமைச்சர்.
- இயல், இசை, நாடகமன்றத் தலைவர் பதவியைப் பெறுவதற்காக 5 கோடி ரூபாய் வரை தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக வாக்குமூலம் அளித்த அமைச்சர்.
என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்குத் தவெகவின் சாதாரண நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரையில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இப்புகார்கள் மீது எந்தவிதமான முதற்கட்ட விசாரணையைக்கூடத் தொடங்காத தவெக அரசும் அதன் காவல்துறையும், எதிர்க்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு கைது நடவடிக்கையில் இறங்குவது, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது பொய்வழக்குகளைப் பதிவு செய்து பழிவாங்கும் ஆட்சியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட காவல்துறையை ஆளுங்கட்சியின் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சட்டத்தைத் தனக்கேற்ற வகையில் வளைத்து, எதிர்க்கட்சியினரை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுப்பதும், சொந்தக் கட்சியினர் மீதான புகார்களைக் கிடப்பில் போடுவதும் ஜனநாயகத்தின் மாண்பிற்கு எதிரானதாகும்.
எனவே, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை இனியாவது உணர்ந்து, ஆளுங்கட்சி என்றால் சலுகை, எதிர்க்கட்சி என்றால் கைது என்ற ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டும் வகையில், ஆளுங்கட்சியினர் மீதான புகார்களையும் முறையாகவும் முழுமையாகவும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.