நாளை பிற்பகலிலும் சட்டமன்றம் கூடுகிறது

நாளை பிற்பகலிலும் சட்டமன்றம் கூடுகிறது. சட்டசபை நிகழ்வில் மாற்றம் கொண்டு வந்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை பிற்பகலிலும் சட்டமன்றம் கூடுகிறது
Published on

பிற்பகல் கூட்டம்

தமிழக சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபைக்கு வந்துள்ள அலுவல் ஆய்வு குழு உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதில், சட்டசபை அலுவலில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 8-ந் தேதி (நாளை) காலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு, அமைச்சர்கள் பதில் உரை ஆகிய அலுவல்கள் நடக்கும்.அன்று பிற்பகலில் 5 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடும். அப்போது இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், போக்குவரத்துத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை அலுவல்கள் நடைபெறும்.

முதல்-அமைச்சர் பதில் உரை

9-ந் தேதி காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானிய கோரிக்கை அலுவல்கள் நடத்தப்படும். 10, 11 மற்றும் 12-ந் தேதிகளில் (விநாயகர் சதுர்த்தி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை.எனவே 9-ந் தேதி தொடங்கும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானிய கோரிக்கை மீதான அலுவல்களின் தொடர்ச்சி 13-ந் தேதி தொடரும். எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தின் முடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார்.மேலும், 13-ந் தேதியன்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மை துறை, ஓய்வூதியங்கள், ஓய்வுகால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

13-ந் தேதி நிறைவு

சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் 13-ந் தேதி மேற்கொள்ளப்பட்டு, அன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெறும். 13-ந் தேதி கேள்வி நேரம் கிடையாது. ஒவ்வொரு நாளும் சட்டசபை காலை 10 மணிக்கு கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com