உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: வார்டு வரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மாநில தேர்தல் ஆணையம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வரையறை செய்வது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர்.

பதவிக்காலம் நிறைவு

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள், தலைவர்கள், மேயர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

இதையடுத்து, மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்க உள்ளதால், அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு மார்ச் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகராட்சி, கந்தர்வகோட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் ஊராட்சி, தென்காசி மாவட்டம் மேலவீராணம், துத்திக்குளம் ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வார்டு மறுவரையறை ஆணைய உறுப்பினர்களான ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அமுதவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன், பேரூராட்சிகளின் இயக்குனர் கே.பி.கார்த்திகேயன், மாநில தேர்தல் ஆணைய செயலர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து, அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

X