

சென்னை,
நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள நில கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தும்போது அந்த ஊராட்சியில் அதற்காகத் தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச ஜனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது. இப்புதிய திருத்த வரைவின்படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்தது. அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம்.
அரசு நினைத்தால் எந்த இடத்திலும் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கலாம் என்பது கொடுங்கோன்மை இல்லையா? விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? பரந்தூரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதை, தடுத்து நிறுத்துவோம், வேளாண்மையைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதியளித்த முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? எத்தனை சட்டங்கள் கொண்டுவந்து வந்து எம் மக்களை அச்சுறுத்தினாலும் நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் இருக்கும்வரை ஏழை எளிய மக்களின் நிலங்களை, அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்காது.
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.