

சென்னை,
தமிழகம் சில்லரைப் பணவீக்கத்தில் தேசிய சராசரியைவிட மிக அதிகமாக 7.29% உடன் முதலிடத்திலும், உணவுப் பொருள் பணவீக்க விகிதத்தில் 12.37% உடன் இரண்டாமிடத்திலும் இருப்பது கவலை அளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பணவீக்கத்தில் தமிழகம் மீண்டும் முதலிடம் (7.29%): 12.37% உணவுப் பணவீக்கத்தால் மக்களை வாட்டி வதைக்கும் ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்!
கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில்லரைப் பணவீக்கம் 6.81% ஆக உயர்ந்தபோதே, தவெக அரசு நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என எச்சரித்திருந்தோம். ஆனால், அந்த எச்சரிக்கையைச் சிறிதும் பொருட்படுத்தாத ஜோசப் விஜய் அரசின் தொடர் நிர்வாகத் தோல்வியால், தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அக்டோபர் மாதத் தரவுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 6.09% ஆக உள்ள நிலையில், தமிழகம் சில்லரைப் பணவீக்கத்தில் தேசிய சராசரியைவிட மிக அதிகமாக 7.29% உடன் முதலிடத்திலும், உணவுப் பொருள் பணவீக்க விகிதத்தில் 12.37% உடன் இரண்டாமிடத்திலும் இருப்பது கவலை அளிக்கிறது.
ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய ஜி.எஸ்.டி (GST) வரி வசூல் சரிவு, முடங்கியுள்ள தொழில் முதலீடுகள், உள்கட்டமைப்புப் பணிகளின் மெத்தனப் போக்கு ஆகியவையே தமிழகப் பொருளாதாரத்தை இந்தப் பாதாளத்தில் தள்ளியுள்ளன.
எனவே, தொடர்ந்து எகிறி வரும் பணவீக்கத்தால் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய் அரசு இனியாவது நிர்வாக மெத்தனப் போக்கைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நோக்கிச் செயல்பட வேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உள்ளூர் சந்தை விநியோகச் சங்கிலியைச் சீரமைத்து, நியாயவிலை மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.