

சென்னை,
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலம் தொடங்கும். தென்மேற்கு பருவமழைக்காலங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். காற்றின் தாக்கமும் அதிகம் இருக்கும். மேலும் சாரல்மழை அதிகளவு பெய்தபடி இருக்கும். இதனால் ஜூன், ஜூலை உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
இந்த நிலையில் தேனி,திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி மழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்துவதால் கோடைகாலம் போல பொதுமக்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் நடந்து செல்கின்றனர்.
ஏராளமானோர் இளநீர், நுங்கு, சர்பத் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். இதனால் இளநீரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மழைஇன்றி நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் ஆடுகள், மாடுகள் குடிப்பதற்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஜூலை 22 வரை இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.