‘தலைமை செயலகத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும்’ - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

அரசு அலுவலகங்களில் வாரம் ஒருநாள் மரபு ஆடை நாள் நடைமுறைக்கு வர இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
‘தலைமை செயலகத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும்’ - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
Published on: 

சென்னை,

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-

மரபு ஆடை தினம்

“தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரம் ஒருநாள் அரசு அதிகாரிகளை வேட்டி சட்டை அணிந்து வரும்படி சொல்லலாம் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர், ‘நல்ல யோசனை. அதிகாரிகளிடம் கேட்டீர்களா?’ என்றார். ‘அதிகாரிகள் உங்களிடம் கேட்க சொன்னார்கள்’ என்றேன்.

வேட்டி, சட்டைகள் வாங்கும்போது கைத்தறி நெசவாளர்களுக்கு வியாபாரம் நடக்கும். நமக்கும் அது ஒரு பண்பாடு என்பதால் உடனடியாக இதற்கு ஏற்பாடு செய்யுமாறு முதல்-அமைச்சர் விஜய் என்னிடம் கூறினார். முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் வாரம் ஒருநாள் மரபு ஆடை நாள் நடைமுறைக்கு வர இருக்கிறது என்பதை தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அறிவிக்கிறோம்.

முதல்-அமைச்சர் விஜய் தமிழுக்கு முன்னுரிமை தரக்கூடியவர். தமிழைப் பற்றி சொன்னால் கேட்டுக் கொண்டே இருப்பார். மதுரையில் தமிழுக்கு சங்கம் வைத்தார்கள். உலகம் முழுவதும் இதுபோன்ற சங்கங்கள் இருக்கின்றன. உலகத்தமிழ் மாநாட்டிற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாமும் அதைப்போன்ற ஒரு முன்னெடுப்பை செய்யலாம் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

தமிழ்ச் சங்கம்

அதன்படி, முதல்-அமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே இருக்கும் சங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் தலைவராக முதல்-அமைச்சரே இருப்பார் என்பதை தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தமிழ் மாநாடு

தமிழ்நாடு நாள் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களின் திருநாள். அவர்களது நெடுநாள் கோரிக்கையின்படி, மீண்டும் உலகத்தமிழ் மாநாடு இந்த தமிழ் மண்ணில் தொடங்கி உலகம் முழுவதும் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அவர் பேசினார்.

X