தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 24-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையில் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

மேலும் மேகதாது பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை காக்க எத்தகைய வழிமுறைகளை கடைப்பிடிப்பது என்பது குறித்தும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேகதாது குறித்த தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை, விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் சட்டசபை கூட்டம் தொடங்கும். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பது வழக்கம். சட்டசபை நிகழ்வை தொடங்கி வைக்க கவர்னருக்கு அமைச்சரவை மூலம் அழைப்பு அனுப்பப்படும். அதற்கான கூட்டம் தான் இது என்றார்.

அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனவரி 3-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com