

சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.