

மதுரை,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கி, தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் வீதி வீதியாக விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் (வயது 29). அவர் மிகக் கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்றார். அப்போது, போதையின் உச்சத்தில் இருந்ததால் லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், லாரி மோதியதில் முத்துப்பாண்டி என்பவர் படுகாயமடைந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்துக்குள்ளான மற்ற வாகனங்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தற்பொழுது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய பின்னரும் ஜெயப்பிரகாஷ் லாரியை நிறுத்தாமல் தப்பியோட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், லாரியை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட ஓட விரட்டிச் சென்றனர். இறுதியாக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போதையில் இருந்த ஓட்டுநரை கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்டனர். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் விபத்து மற்றும் பொதுமக்களின் தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையால் ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.