

போத்தனூர்,
சேலத்தில் எத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில், 40 ஆயிரம் லிட்டர் தரையில் கொட்ட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு நேற்று காலை ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. அதில் 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் திரவம் இருந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டிரைவர் டாங்கன் (வயது 49) என்பவர் லாரியை ஒட்டினார்.
கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோடு செட்டிபாளையம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஒரு வளைவில் டேங்கர் லாரி திரும்ப முயன்றது. அப்போது லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த டேங்கரில் உடைப்பு ஏற்பட்டது.
அதில் இருந்த 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் திரவம் சாலை முழுவதும் ஆறாக வழிந்தோடியது. மேலும் அருகில் இருந்த காலி இடத்திலும் தேங்கி நின்றது. அது, எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயன திரவம் என்பதால், பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மற்றும் கோவை தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரம் தரையில் கொட்டிய எத்தனால் தீப்பிடிப்பதை தடுக்க தீயணைப்பு படையினர் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எத்தனால் லாரி கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாதபடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.