ஆடி அமாவாசையையொட்டிதென்பெண்ணை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டிதென்பெண்ணை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Published on

கிருஷ்ணகிரி

ஆடி அமாவாசையையொட்டி தென்பெண்ணை ஆற்றில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை நாளில், நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே முன்னோர்களை வரவேற்கும் விதமாக எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் அளிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தைகளையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

தர்ப்பணம் செய்து வழிபாடு

அதன்படி நேற்று ஆடி அமாவாசை என்பதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடினர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதே போல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டனர். மேலும் பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையை வழங்கி வழிபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com