டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை அமலாக்கத்துறை வெளியிட்டது.

அதில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது. கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அதில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com