டாஸ்மாக் பணியாளர்களின் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி

நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருவது ஏற்கத்தக்க நடைமுறையல்ல என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மு.வீரபாண்டியன்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் கடந்த 01.11.2026ம் தேதி முதல் சில்லறை மதுபானங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை அமலாக்கி வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு தேவையான முன் ஏற்பாடுகளும், கட்டமைப்பு வசதிகளும் செய்யாமல், எந்திரகதியில் செயல்படுத்த பணியாளர்களை நிர்பந்திப்பதால் தன்னெழுச்சி போராட்டங்களில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ் கடந்த ஆகஸ்ட் 27-ம்தேதி, தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு வெளிப்பணி முகமை (அவுட்சோர்சிங்) ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். அது நடைமுறைக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறையில் பணிபுரிய மதுக்கடைக்கு மூன்று ஸ்கேன் செய்யும் கருவிகள் தேவைப்படுகின்றன. காலிப்பாட்டில்களை பெறுவதற்கு கோணிப்பையும், கடையில் திரளும் மது நுகர்வோர்களை வரிசை முறையில் ஒழுங்குபடுத்த தடுப்புப் பாதைகள் மற்றும் காலிப்பாட்டில்களை சேமித்து வைக்க தேவைப்படும் இடவசதி, காலிப்பாட்டில்களுக்கு தலா ரூ.10 வீதம் தருவதற்கு தகுந்த சில்லறை காசுகள் வழங்க ஏற்பாடு என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பணிபுரிய முடியாத நெருக்கடிக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்து வந்த குளறுபடிகள், தவறுகள் பெருமளவு குறைக்கப்பட்டு, அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பணியாளர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர். காலிப்பாட்டில் திரும்பப் பெறுவதில் நடக்கும் தவறுகளை களையவும் பணியாளர்கள் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், புதிய முறையில் பணியாற்ற தங்களுக்கு இன்றியமையாக் கட்டமைப்பும், அவசியமான கருவிகளும், தடையற்ற இணையதள வலை இணைப்பும் வழங்க வலியுறுத்துகின்றனர்.

பணியாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண்பதற்கு மாறாக, தற்காலிக நீக்கம் என நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருவது ஏற்கத்தக்க நடைமுறையல்ல. அது பணியாளர் விரோத நடைமுறை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்களிடம் விளக்கம் கோரும் கடிதம் கொடுத்திருப்பதும், புதிய தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய முயற்சிப்பதும் பணியாளர்களை ஆத்திரமூட்டும் செயலாகும். தொழில் அமைதியை சீர்குலைக்கும் எதிர்மறைப் போக்காகும்.

டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது விரைந்து பேசி தீர்வு காண வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தொழில் அமைதி காக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X