மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு..- அமைச்சர் அறிவிப்பு!

இக்குழுவானது 30.11.2029 வரை செயல்பாட்டில் இருக்கும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன்
Published on: 

சென்னை,

மாவட்ட அளவிலான வரிசெலுத்துவோர் ஆலோசனைக்குழு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் 03.11.2026 அன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுதுறை வளாகக் கூட்டரங்கில், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி வருவாய், ஜி.எஸ்.டி அல்லாத பிற வரிகள், நுண்ணறிவுப் பிரிவு, தணிக்கை பிரிவு, சட்டப்பிரிவு, மறு ஆய்வு, முறையீடு மற்றும் சீராய்வு உள்ளிட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழு

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:

மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட உள்ளது.

அரசின் வரி செலுத்துவோர் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைப்பதற்கு இக்குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவின் முக்கிய நோக்கமானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலான விற்பனை வரி தொடர்பாக பிரச்சனைகள், ஆலோசனைகள் குறித்த விவாதங்களை நடத்தி அதன் குறைகளை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும்.

மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு கீழ்கண்டவாறு அமைக்கப்பட உள்ளது.

தலைவர் - மாவட்ட ஆட்சித் தலைவர்

அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்

1. இணை ஆணையர் (மாநிலவரி) (வருவாய் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை ஆணையர்கள் (மாநிலவரி) இருந்தால் தலைமையிடத்து துணை ஆணையர் (மாநிலவரி) அல்லாத துணை ஆணையர் (மாநிலவரி) அவரது எல்லைக்குட்பட்ட துணை ஆணையர் (நுண்ணறிவு) சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்கள். மாநில அளவிலான விற்பனை வரி ஆலோசனைக் குழுவிலுள்ள அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்

2. சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்/உதவி ஆணையர் துணை ஆணையர் (மத்தியவரி)

3. பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம்

அலுவல் சாரா உறுப்பினர்கள்

சட்டமன்ற உறுப்பினர் - ஒருவர்

முதல்நிலை வேளாண் விளைவிப்போரின் சார்பாளர்கள் - இருவர்

தொழில் தயாரிப்பாளரின் சார்பாளர் - இருவர்

வணிகர்களின் சார்பாளராக மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் - இருவர்

கூட்டுறவு நிறுவனங்களின் சார்பாளர் - ஒருவர்

குடிசைத் தொழில்களின் சார்பாளர் - ஒருவர்

நுகர்வோரின் சார்பாளர் - ஒருவர்

செயலர்

சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தின் தலைமையிடத்தில் பணியாற்றும் துணை ஆணையர் (மாநிலவரி) உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்டு இக்குழு அமைக்கப்படும்.

இக்குழுவினை தங்கள் மாவட்டத்தில் 30.11.2026க்குள் அமைக்க அனைத்து கோட்ட இணை ஆணையருக்கு(மாநிலவரி) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழுவானது 30.11.2029 வரை செயல்பாட்டில் இருக்கும். மேலும், இக்குழுவின் முதல் கூட்டத்தினை டிசம்பர் 15, 2026க்குள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுதுறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், வணிகவரிதுறை ஆணையர் எஸ். நாகராஜன் மற்றும் வணிகவரிதுறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X