கோவில்பட்டியில் பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து: ஆசிரியை- மகள் பலி

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.
கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் தாய்-மகள் பலி
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவரது மனைவி வளர்மதி (வயது 36). இவர் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அஸ்விகா (வயது 9) என்ற மகளும் உண்டு. இவர் கோவில்பட்டி பாரதிநகரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கூடம்

ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் விடுமுறைக்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். வழக்கம் போல நேற்று (வியாழக்கிழமை) அன்று காலையில் தாயும் மகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். பள்ளி முடிந்தவுடன் மாலையில் அவர்களை அழைத்துக் கொண்டு ரமேஷ் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

விபத்து

பசுவந்தனை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அரசு பஸ் ரமேஷ் பைக்கில் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி பைக்கிலிருந்து மூன்று பேரும் சாலையில் விழுந்தனர். விழுந்ததில் வளர்மதி , அஸ்விகா ஆகியோர் பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கினர்.

உயிரிழப்பு

அவர்களின் தலை மீது பஸ்சின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரமேஷ் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சிகிச்சை

படுகாயமடைந்த ரமேஷ் உடனடியாக போலீசாரால் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வளர்மதி மற்றும் அஸ்விகா ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவனின் கண் முன்னே மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com