

நெல்லை,
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் அருள் பாக்கியம் (வயது 48). இவர் தற்போது நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் வசித்துக்கொண்டு, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் அருள் பாக்கியம் அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் ஆசிரியர் அருள் பாக்கியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று அங்கு பணியிலிருந்த ஆசிரியர் அருள் பாக்கியத்தைக் கைது செய்தனர். பள்ளி ஆசிரியரே தனது மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.