

நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் முதலாவது அணு உலையின் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பழுதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு அணு உலைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1,152 மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. தற்போது முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 576 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைப்பதில் தடைப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.