உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம்; எடப்பாடி பழனிசாமி ஏன் அலறுகிறார்? - அமைச்சர் ரகுபதி கேள்வி

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் ரகுபதி 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாட்டு மக்களின் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் எனும் தொலைநோக்கோடு மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயலாற்ற 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' எனும் புதுமையான திட்டத்தை முதல்-அமைச்சர் வருகிற 9-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தன்னார்வலர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சந்தித்து அவர்களின் கனவுகளைக் கேட்டறிய உள்ளனர். அவர்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதை அரசு இலக்காக வைத்துச் செயல்பட உள்ளது. ஆனால் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் பழனிசாமி இந்த திட்டத்தைப் பற்றி ஆதாரமற்ற அவதூற்றைக் கக்கியிருக்கிறார்.
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து, மக்களின் கனவைத்தான் கேட்கிறது. அதன்பிறகுதான் அது திட்டமாகச் செயல்வடிவம் பெறும். கனவைக் கேட்டதற்கே பழனிசாமி ஏன் அலறுகிறார்? ஆகாயத்திற்கும் வானத்திற்கும் குதிக்கிறார்?
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை முதல்-அமைச்சரிடம் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ தெரிவித்து மனுக்கள் மீது உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட்ட திட்டம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொடர்புத் திட்டம் மகத்தான வரவேற்பை பெற்றது. அப்படி மக்களோடு நேரடி தொடர்பு கொண்ட திட்டம் எப்படி வெற்றி பெற்றதோ அதேப் போல 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.”
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.






