தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை உயரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை உயரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடும் வெயில் நிலவி வருகிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரி கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com