கிணத்துக்கடவு பகுதியில் 6 கல்குவாரிகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து - கலெக்டர் உத்தரவு

கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து விவசாயி முருகானந்தம் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
கல்குவாரி
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர்.10 முத்தூர் பகுதியில் சில கல்குவாரிகள் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்த குவாரிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயி முருகானந்தம் என்பவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். விவசாயியின் இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் பவன்குமார்

இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமையில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் மெகபூகான் உள்ளிட்ட 8 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அதிரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருந்த விவசாயி முருகானந்தத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அறிக்கை

அதிகாரிகள் குழுவினர் நெம்பர்.10 முத்தூர் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரங்கள் குறித்து அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட கல்குவாரிகளில் ஒரு சில விதிமீறல்களும், குறைகளும் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை அதிகாரிகள் குழுவினர் மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் சமர்ப்பித்தனர். அதிகாரிகளின் அறிக்கையைத் தொடர்ந்து தவறு செய்த குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் சாட்டை சுழற்றியுள்ளது.

தற்காலிகமாக ரத்து

நெம்பர்.10 முத்தூர் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 6 கல்குவாரிகளின் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்து கலெக்டர் பவன்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து விவசாயி முருகானந்தம் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com