நெல்லை அருகே பரபரப்பு: குடிபோதையில் தாக்கிய மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்

நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் மதுபோதையில் தன்னை கடுமையாக தாக்கிய மகனை, தாய் கத்தியால் நெஞ்சு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
நெல்லை அருகே பரபரப்பு: குடிபோதையில் தாக்கிய மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்
Published on

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா (வயது 56). இவர்களுக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி(27) என்ற மகனும் உள்ளனர்.

தந்தை கண்ணனும் மகன் மாயாண்டியும் சேர்ந்து அதே பகுதியில் மட்டன் ஸ்டால் வைத்து தொழில் செய்து வந்தனர். மாயாண்டிக்கு தொடர்ந்து மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மாயாண்டி வழக்கம் போல் அதிக போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் இருந்த தனது தாய் லதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த லதா வீட்டில் காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து தற்காப்புக்காக மாயாண்டியின் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நெஞ்சில் பலத்த காயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்து கிடந்த மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் லதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com