பட்டப்பகலில் வில்லிவாக்கத்தில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை - நண்பர்கள் 4 பேர் வெறிச்செயல்

பட்டப்பகலில் வில்லிவாக்கத்தில் ரவுடி ஒருவர் ஓட,ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் வில்லிவாக்கத்தில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை - நண்பர்கள் 4 பேர் வெறிச்செயல்
Published on

சென்னை வில்லிவாக்கம் திருவேங்கடம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 32). பிரபல ரவடியான இவர் மீது வில்லிவாக்கம், ஐ.சி.எப்.,திருமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வில்லிவாக்கத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் தகராறில் சதாம் உசேன், 4 பேரையும் ஓட ஓட விரட்டி தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், நேற்று காலை வீட்டு அருகே சதாம் உசேன் நின்று கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை ஓட,ஓட, தலை, கை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதனால் காயமடைந்த சதாம் உசேன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த சதாம் உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான 4 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி ஓட,ஒட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com