

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே முன்னாள் விசிக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் பால முருகன். முன்னாள் விசிக நிர்வாகியான இவர் சோட்டையன் தோப்பு பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடையை திறந்து விட்டு, தனது பைக்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பால முருகனை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், பாலமுருகனை மறித்து, ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர் கொலை சம்பவம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.