தஞ்சாவூர்: அரசலாற்றை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

காவிரி சமவெளி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
Published on

கும்பகோணம்

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான அரசலாற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தில் தொடங்கும் அரசலாறு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியே சென்று காரைக்கால் கடலில் கலக்கிறது. மேலும், இந்த ஆறு அப்பகுதிகளை சுற்றியுள்ள 1.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு காவிரி சமவெளி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக மிக குறைவான அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தூர்வாரும் பணிகள் நடக்காமல், அரசலாற்றில் புல், பூண்டுகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்லும் பாதையை அடைத்துள்ளன.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை எப்படி செல்லும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசலாற்றை முழுமையாக சுத்தம் செய்தால் மட்டுமே அதன் கிளை ஆறுகளான நாட்டாறு, நண்டலாறு, கீர்த்தி மானாறு ஆகிய ஆறுகள் வழியாக, இறுதி வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையும். எனவே, விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் காப்பதற்காக அரசலாற்றில் உள்ள மரம் செடிகளை அகற்றி, ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com