மனசாட்சியுள்ள மக்களாட்சியை ஆதரித்த உறுப்பினர்களுக்கு நன்றி: முதல்-அமைச்சர் விஜய்

நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
மனசாட்சியுள்ள மக்களாட்சியை ஆதரித்த உறுப்பினர்களுக்கு நன்றி: முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.

இதையடுத்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்பிக்கை தீர்மானத்தில் மக்களுக்கான இந்த ஆட்சியை, மனசாட்சி உள்ள மக்களாட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை, நமது அரசின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த அணியும் இல்லாமல், தனி அணியாக, தனி சிறப்பு மிக்க அணியாக, மக்கள் அணியாக, மக்களை விரும்பும் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களம் கண்டோம்.

1967 மற்றும் 1977 தேர்தல்கள் வாயிலாக அமைந்த சாமானியர்களின் அரசைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக தமிழக வெற்றிக் கழகமும் சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று மக்களிடம் தீர்மானமாக கூறினோம். மக்களும் நம் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமாக வாக்களித்தனர். வாகை சூடும் அந்த வரலாறு திரும்பியது. விசில் அலை வெற்றிய அலையாக மாறியது. ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது. கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள் 34.92 சதவீதத்துடன் 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 208 வாக்குகளை மக்கள் தந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிக மிக சிறிய அளவில் ஒரு நூலிழைவில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. அதனால் இந்த அரசை சிறுபான்மை அரசு போல யாரும் நினைத்தால், அதிலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம், இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான, பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசு. அதுமட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக அமைந்த அரசுதான் இந்த அரசு. அந்த நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதால் தான், இந்த நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நமது அரசு சார்பாக சில உத்தரவாதங்களை நான் தரவேண்டும் என்று விரும்புகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த மக்கள் அரசு, மனசாட்சி உள்ள மக்களாட்சியை தரும் என்று உறுதியளிக்கிறேன். சமூகநீதி, சமநீதி, சமவாய்ப்புடன் உண்மையான உறுதியான ஜனநாயகத்துடன், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும். அதில் சிறிதும் மாற்றும் இல்லை. நம்முடைய இந்த ஆழமான நம்பிக்கையை மனதார நம்பி வாக்களித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com