

சென்னை,
ரஷியாவில் வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர்கள் ஆர்.விக்னேஷ், முகமது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன் லிபாகு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை, தி.மு.க. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று நேரில் சந்தித்தார். அப்போது உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை கொளுத்துவஞ்சேரியை சேர்ந்த ஆர்.சந்தோஷ்குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிவுற்ற காரணத்தால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவண செய்வதாகவும், ஆர்.சந்தோஷ்குமார் மலேசியாவில் இருந்து தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
ரஷிய நாட்டில் தமிழக மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி.யை, ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசினர்.
அப்போது, இறந்த மாணவர்களுக்கு உடற்கூறு ஆய்வு, எம்பாமிங் சான்றிதழ், கொரோனா பரிசோதனை ஆகியவை செய்த பின்னர், விமான சேவையை பொறுத்து இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.