சேலம் அருகே கார் கவிழ்ந்து அ.தி.மு.க. எம்.பி. காயம்

சேலம் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி. காயம் அடைந்தார்.
சேலம் அருகே கார் கவிழ்ந்து அ.தி.மு.க. எம்.பி. காயம்
Published on

சேலம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் காமராஜ் (வயது 52). இவர் சேலத்தில் நடந்த, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து காரில் புறப்பட்டார். காரில் அவருடன் உதவியாளர் முகம்மது நாசர் (50) என்பவர் வந்தார். காரை டிரைவர் வேல்முருகன் ஓட்டினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வந்தபோது தாமே காரை ஓட்டுவதாக காமராஜ் எம்.பி. கூறியுள்ளார். பின்னர் தானே காரை ஓட்டினார். அப்போது அவர் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்டி வந்தார்.

சேலம் மின்னாம்பள்ளி பஸ்நிறுத்தம் அருகே காலை 9.15 மணியளவில் வந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய கார் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவரை தாண்டி மறுபக்கத்திற்கு சென்று தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காமராஜ் எம்.பி.க்கு கையில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். காமராஜ் எம்.பி.யை மீட்டு மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். கையில் அவருக்கு கட்டு போடப்பட்டது.

அவருடன் வந்த உதவியாளர் முகம்மது நாசர், டிரைவர் வேல்முருகன் ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சேலம் சென்றார்.

இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரில் சீட் பெல்ட் அணிந்து காரை காமராஜ் எம்.பி. ஓட்டிச்சென்றதால் காயத்துடன் உயிர் தப்பினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் விபத்தில் சிக்கி பலியானார்.

இந்த நிலையில் நேற்று சேலம் அருகே கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com