மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது: மாணிக்கம் தாகூர்

விவாதங்களை முடக்கி, நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாற்ற நினைத்தால், நீங்கள் மக்களின் மன்றத்தில் தப்பவே முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

சென்னை,

நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகத்தின் மாண்பைச் சீர்குலைத்து, நாடாளுமன்றச் செயல்பாட்டை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது மோடி அரசு!

19 அமர்வுகள் கொண்ட இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவை வெறும் 15 சதவீத நேரமும் (22 ஆண்டுகளில் இல்லாத சரிவு), மாநிலங்களவை 33 சதவீத நேரமும் மட்டுமே செயல்பட்டுள்ளது.

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு

அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களில் 92 சதவீத மசோதாக்களை நிறைவேற்றியதாக மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, அதில் 11 மசோதாக்களில் 9 மசோதாக்களை மக்களவையில் அமைச்சரைத் தவிர வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விவாதத்தில் பங்கேற்கவிடாமல், வெறும் சில நிமிடங்களில் (பிறப்பு-இறப்பு பதிவு மசோதா 2 நிமிடங்களிலும், வரி திருத்த மசோதா 3 நிமிடங்களிலும்) சர்வாதிகாரப் போக்கில் புல்டோசர் செய்து நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற கேள்வி நேரம் முடக்கம்

கேள்வி நேரத்தை முற்றிலுமாக முடக்கியதன் விளைவாக, மக்களவையில் எழுப்பப்பட்ட 380 கேள்விகளில் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழிப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை கேள்வி நேரம் வெறும் 9 நிமிடங்களோடு சுருக்கப்பட்டது. 1952-க்குப் பிறகு முதல்முறையாகத் தொடரின் முதல் நாள் தேசிய கீதம் மற்றும் கடைசி நாள் வந்தே மாதரம் பாடலின் போது தவிர முழு தொடரிலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் ஓடி ஒளிந்து நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து ஓடி ஒளிந்துள்ளனர்.

ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு

நீதிக்காகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தடியடி மற்றும் அத்துமீறல்கள் குறித்தும், நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்தும் அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது.

ஓடி ஒளியும் மோடி அரசு

மக்களின் பிரச்சினைகளுக்கும், மாணவர்களின் போராட்டக் குரல்களுக்கும் பதிலளிக்காமல் ஓடி ஒளியும் மோடி அரசே... விவாதங்களை முடக்கி, நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாற்ற நினைத்தால், நீங்கள் மக்களின் மன்றத்தில் தப்பவே முடியாது! மாணவர்களும் மக்களும் உங்கள் சர்வாதிகாரத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்- கண்டிப்பாகத் தட்டிக்கேட்பார்கள், கேள்விக்குள்ளாக்குவார்கள்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com