தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
Published on

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) மூலம் விவசாயிகளிடம் இருந்து தடையின்றி நெல் கொள்முதல் செய்யத் தேவையான விரைவான ஒப்புதல்களை மத்திய அரசு வழங்க வேண்டும். காரணம் செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அப்படி என்றால் இன்னும் 3 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும். மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு கொடுத்து இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகளின் சார்பில் 100 கிலோ எடை உள்ள குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் இன்று வரை மத்திய அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தமிழக விவசாயிகளிடம் இருந்து காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் உடனடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com