தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீனவர்களை கைது செய்வதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர் பகுதிகளிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






