

சென்னை,
தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்று இருக்கிறார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நொடிக்கு நொடி நடந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், அடுத்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து அசத்தியிருக்கிறார்.
பிரபல நடிகர் என்ற பிம்பம் அவருக்கு இந்த வெற்றியை தேடித்தந்திருக்கலாம் என்றாலும், ஆளுங்கட்சி (தி.மு.க.) மீதும், ஆண்ட கட்சி (அ.தி.மு.க.) மீதும் மக்களுக்கு இருந்த வெறுப்பு, திரை வழி தெரிந்த முகமான விஜய்க்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், ஒன்றை தவிர்த்து (எடப்பாடி தொகுதி) மீதமுள்ள 233 தொகுதிகளில் த.வெ.க. போட்டியிட்டு, 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை கொடுக்கவில்லை என்றாலும், இருபெரும் திராவிட கட்சிகளை (தி.மு.க., அ.தி.மு.க.), 59 ஆண்டுகள் கோலோச்சிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்திருப்பதே இந்திய அரசியலில் பிரமிப்பாக பார்க்கப்படுகிறது.
த.வெ.க. தலைவரும், முதல்- அமைச்சருமான விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நேரத்தில், அவருடைய கடைசி படமான ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால், பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவில்லை. தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் விபத்து சம்பவம். அது தொடர்பான சி.பி.ஐ. விசாரணை. அடுத்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்படி, தொடர் பிரச்சினைகளை சந்தித்து வந்த விஜய், அத்தனை தடைகளையும் தாண்டி, இப்போது தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார்.
முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று விஜய் முத்திரை பதித்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால், முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பதில் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆதரவு கரம் நீட்டி, 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினாலும், அப்போதும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை த.வெ.க.வுக்கு போதவில்லை.
இந்த நேரத்தில், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் எதிர்பார்த்தார். ஆனால், சாதகமான பதில் வராத நிலையில், காத்திருந்தார். ஒரு வழியாக ஒவ்வொரு கட்சிகளாக த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. அதன்பிறகுதான், விஜயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இனி, முதல்-அமைச்சர் விஜய்க்கு காத்திருக்கும் சவால்களை பற்றி பார்ப்போம். தற்போதைய நிலையில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இது, தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் வாங்கிய கடன் என்றாலும், இனி இந்த சுமையை புதிதாக பொறுப்பேற்கும் த.வெ.க. அரசுதான் தாங்கியாக வேண்டும்.
தமிழக அரசுக்கு தற்போது ஆண்டு வருமானமாக வரிகள் மற்றும் இதர இனங்கள் மூலம் சுமார் ரூ.3½ லட்சம் கோடி கிடைக்கிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஊதியம், பிற துறைகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வாங்கிய கடனுக்கான வட்டி, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்று கணக்கிட்டு பார்த்தால், ஆண்டுக்கு ரூ.4½ லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை செலவு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது, த.வெ.க. தலைவர் விஜய்யும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தே ஆட்சிக்கு வந்திருக்கிறார். மகளிர் உரிமைத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்வு, பெண்களின் திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பல்வேறு புதிய திட்டங்களை விஜய் அறிவித்து இருக்கிறார். இதை எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி கூடுதலாக தேவைப்படும்.
அதற்கான நிதி ஆதாரம் என்ன? கேள்வி முதலில் எழுகிறது. இது முதல் சவால் ஆகும். அடுத்து, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் இருபெரும் திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வின் எதிர்ப்பு கணைகளை தாங்கியாக வேண்டும். இந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் ஆட்சியையே நடத்தியாக வேண்டும். இது 2-வது சவால்.
அடுத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ள விஜய், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதி பகிர்வை எவ்வாறு கேட்டுப்பெறப்போகிறார்?, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த என்ன முடிவு எடுக்கப்போகிறார்?, தமிழக பிரச்சினைகளுக்கு எவ்வாறு குரல் எழுப்பப்போகிறார்? என்பது அடுத்தக்கட்ட சவால்கள்.
த.வெ.க.வில் விஜய் உள்பட வெற்றி பெற்றுள்ள 108 பேரில், ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அரசியல் புதிது. விஜய் எனும் ஒற்றை முகத்துக்கே தமிழக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, த.வெ.க. உறுப்பினர்களுக்கு சட்டசபை புதிது. அவர்களில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, அந்தப் பதவியும் புதிது. அப்படி இருக்கும்போது, இவர்கள் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு மெச்சும்படி பணியாற்றப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
உடனடி தீர்வாக, சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், தங்கள் பகுதி பிரச்சினைகளுக்கு அரசை எளிதாக அணுகவும், அரசு சேவைகளை எளிதாக பெறவும் போதிய வசதிகளை மக்களுக்கு செய்து கொடுத்தாலே, அவர்களின் அடிப்படை தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் மக்களின் நன்மதிப்பையும் செலவில்லாமல் பெற முடியும். இனி, சவால்களை எப்படி விஜய் சமாளிக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.