

சென்னை,
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கின்றன என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான அரசியலமைப்புச் சாசன அமைப்புகளில் ஒன்றான இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையம் என்பது தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரின் தனிப்பட்ட அலுவலகம் அல்ல. அது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சாசன அமைப்பு. தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய ஆலோசனையுடனும், சட்டப்பூர்வமான நடைமுறைகளுடனும் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், கடந்த பல மாதங்களில் வாக்காளர் பட்டியல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில், தங்களிடம் ஆலோசிக்காமலோ அல்லது தங்களுக்குத் தெரியாமலோ முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரண்டு தேர்தல் ஆணையர்களே பதிவுசெய்துள்ள தகவல்களை தனியார் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ஏனைய இரு தேர்தல் ஆணையர்களே கடுமையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது சாதாரண நிர்வாகக் கருத்து வேறுபாடு என்று கடந்து செல்லக்கூடிய விவகாரம் அல்ல. “தேர்தல் ஆணையம்” என்ற அமைப்பின் பெயரில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரே நபரின் கைகளில் குவிவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமது சக தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகள் மன்னிக்க முடியாதவை.
ஒருபுறம், இரண்டு தேர்தல் ஆணையர்கள் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகின்றன. மறுபுறம், தேர்தல் ஆணையம் அனைத்து முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளே என விளக்கம் அளித்துள்ளது. இந்த இரு நிலைப்பாடுகளுக்கும் இடையிலான உண்மை என்ன என்பதை நாட்டின் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளங்களில் ஒன்றாகும். அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அதன் உள்நடவடிக்கைகள் அமைந்து விட்டது கண்டனத்திற்குரிது.
இந்திய மக்களின் வாக்குரிமையையும், தேர்தல் ஜனநாயகத்தின் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புச் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம், எந்த அரசியல் அழுத்தத்திற்கும் அப்பாற்பட்டு, முழுமையான சுதந்திரத்துடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும்.
இது தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தலைமையில் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.