பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

“சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” எங்கே போனது? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்-அமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்! என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மவுனம் காப்பது ஏன்?

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த மாதம் 26 ஆம் தேதி ராணிப்பேட்டையில் காணாமல் போன 1 வயது பெண் குழந்தை குறித்தும், செஞ்சியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது பெண் குழந்தை குறித்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் ஆளும் தவெக அரசுக்கான எச்சரிக்கை மணி.

ஜோசப் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களையும், தவெக ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களையும் தேடித் தேடி கைது செய்வதில் துடிப்புடன் செயலாற்றும் தமிழகக் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? "அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்" என்று வசனம் பேசிய ஜோசப் விஜய் தற்போது மவுனம் காப்பது ஏன்?

சிறப்பு அதிரடிப்படை எங்கே போனது?

தவெக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” எங்கே போனது? என்னதான் செய்து கொண்டிருக்கிறது? போகிற போக்கைப் பார்த்தால், பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு பெற்றோரும் தனி ‘Police escort’-ஐ நியமிக்க வேண்டும் என்ற அவல நிலையை தவெக அரசு உருவாக்கிவிடும் போல.

எனவே, மழைக்கால ஆய்வுப் பணிகளைக் கூட ‘Reels’ ஆக எடுத்து வெளியிடுமளவிற்கு விளம்பர மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் முதல்-அமைச்சரும், அவரது அமைச்சர்களும் இனியாவது Reality-யை உணர வேண்டும்! ஏற்கனவே காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துவதுடன், இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்! காவல்துறையினரின் ரோந்துப் பணிகளை பலப்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

X

Daily Thanthi
www.dailythanthi.com