சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
Published on

சென்னை,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் இன்று அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com