வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் மீது பாலியல் வன்தாக்குதல் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்கப்பட வேண்டும்
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் மீது பாலியல் வன்தாக்குதல் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
Published on

புதுக்கோட்டை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது

கடந்த மே 10 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், முதல்-அமைச்சர் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” அமைக்க உத்தரவிட்டார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் காவல் சரகத்தில் உள்ள கிராமத்தில், தந்தையில்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் வாய்பேச முடியாத, செவித்திறனில்லாத 35-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் (17.05.2026) ஞாயிறு அன்று கூலி வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் போது சில சமூக விரோதிகளால் வழி மறித்து, கடத்திச்சென்று, கூட்டு பாலியல் வன்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சகித்துக் கொள்ள முடியாத குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் பரிதாபகரமான நிலையில் சாலையில் அழுது கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த பெண் காவலரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்து உதவ வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com