தனியார் ஆஸ்பத்திரிகளில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்கப்படும்; அரசாணை வெளியீடு

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவுகள் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்கப்படும்; அரசாணை வெளியீடு
Published on

அரசாணை வெளியீடு

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் வரையறை குறித்த ஆலோசனை கூட்டம், கடந்த 14-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா சிகிச்சைகளை ஏழை-எளியோருக்கு ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கிடலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனரின் பரிந்துரைகளை அரசு ஏற்று புதிய ஆணைகளை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தனியார் ஆஸ்பத்திரிகளில்...

* மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிறது.

* முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி, அதிதீவிர மற்றும் அதி தீவிரமில்லாத கொரோனா தொற்றுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

* முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான அரசு மருத்துவரின் பரிந்துரை படிவம் இனி தேவையில்லை என்ற பரிந்துரை ஏற்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்...

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சை கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிதமான ஆக்சிஜன் உதவி இல்லாமல் ஒருநாள்

சிகிச்சை கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை கட்டணமாக ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை மற்றும் அடையாளம் காணப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, ஈரோடு, மற்றும் அடையாளம் காணப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.3 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். மேலும் நகரவகை பிரிவின் படி தரக்கட்டணமும் (ஏ1 மற்றும் ஏ2) வழங்கப்படும்.முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அதிதீவிர கொரோனா சிகிச்சை கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவு வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஒருநாள் சிகிச்சை கட்டணமாக ரூ.35 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் வசதி கொண்ட ஒருநாள் சிகிச்சை கட்டணமாக ரூ.30 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஒருநாள் சிகிச்சையாக ரூ.25 ஆயிரமும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

பொதுமக்கள் நலனுக்காக கொரோனா சிகிச்சை கட்டணம், தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிரமில்லா சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரையிலும், தீவிர சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.சிகிச்சைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டண தொகையானது 2 மாதங்களுக்குள் தொற்றின் தன்மைக்கேற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்பட மாட்டாது. அப்படி வசூலிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் 18004253993, 104 என்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். இந்த புகார் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்டங்களின்கீழ் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com