

சென்னை,
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவையை 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை கூட்டம் 2 நாட்கள் நடக்கும். கொரோனா காரணமாக இந்த நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். கொரோனா அதிகரித்து வருகிறது. நமக்கு மக்கள் தான் முக்கியம். அதற்கேற்ப முதல்-அமைச்சர் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களுக்கு அவர் மேல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் பயமாகத்தான் இருக்கு. அதனால் தான் அவையை சீக்கிரம் முடிக்க வேண்டியுள்ளது.
எனவே இன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். நாளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை வழங்குவார். வினாக்கள், விடையுடன் சட்டசபை நிகழ்வு தொடங்கும். இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது தான் நோக்கம். இதை முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் இன்று ஆரம்பிக்க இருக்கிறோம். அந்த வகையில் கேள்வி நேரம் நேரடியாக ஒளிப்பரப்பாகும். முதல்-அமைச்சர் பதில் உரையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்
சட்டசபையில் இன்றைய நிகழ்வாக, தமிழக முன்னாள் கவர்னர் மறைந்த ரோசய்யா, முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் மற்றும் வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கன்னட நடிகர் மறைந்த புனீத் ராஜ்குமார், விவசாய சங்க பொதுச்செயலாளர் மறைந்த துரை மாணிக்கம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிதி ஒதுக்கல் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.